இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அவர் இலங்கைக்கான தூதுவராக சில பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஜோபைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்நிலையில் அவர் இலங்கைக்கான புதிய தூதுவராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருப்பதை பிரதி இராஜாங்கச்செயலாளர் வென்டி ஆர்.ஷேர்மன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப்பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவிவகித்துள்ளார்.
மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஜுலி சங் கலிபோர்னியா – சான்டியாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொதுவிவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]