ஜனாதிபதியை பெயரளவிலான நிர்வாகியாக்கி சர்வ கட்சி அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போல் செயற்படுகிறார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலம்வாய்ந்த நாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு சாதகமான அமைய கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் மிக மோசமான முறையில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடி நாட்டு மக்கள் முழுமையாக வீதிக்கிறக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்,தாக்கங்களுக்கான தீர்வு என்னவென்பது தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் பலமுறை யோசனைகளை முன்வைத்தோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எம்மை அலட்சியப்படுத்தும் நோக்கில் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்தவில்லை.அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் இன்று முழு நாட்டையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தீவிரமடைந்துள்ள நெருக்கடிக்கு பொதுவான அடிப்படையில் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.தேசிய மட்டத்திலான நெருக்கடிகளை பிற நாட்டவர்களுக்கு சாதகமாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவது அவதானத்திற்குரியது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பின் பொறுப்பினை தனியார் நிறுவனங்களுக்கு கையளிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.எரிபொருள் விநியோகத்தில் இருந்து அரசாங்கம் முழுமையாக விலகினால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நாட்டின் எரிவாயு விநியோக கட்டமைப்பு அரசாங்கத்திடம் முழுமையாக காணப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடையவில்லை.இவரின் தூரநோக்கு சிந்தனைகளை தற்போதைய அரசாங்கம் அவமதிக்கும் வகையில் செயற்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போன்று செயற்படுகிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடி தேசியத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடியனை பிற நாடுகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆசிய நாடுகளுக்கு ரஷ்யா தனது வர்த்தக சந்தையில் வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்தியா அதன் பயனை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளது.ஆனால் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள அதிக சாத்தியம் காணப்படும் பட்சத்திலும் அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தமால் பைத்தியம் போல் செயற்படுகிறது.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் அங்கிகாரம் கிடையாது.ஆகவே ஜனாதிபதியை நாமநிர்வாகியாக்கி சர்வககட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல தரப்பினரும் முதலில் ஒன்றினைய வேண்டும்.பொருளாதார நெருக்கடியினை சாதகமான கொண்டு வெளிநாடுகள் நாட்டில் தடம் பதித்தால் அது மேலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.