ஐ.நா. மனித உரிமைகள் சபையானது இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் உள்நாட்டு விவகாரங்க ளில் தொடர்ந்தும் தலையிட்டு வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கையிலுள்ள சட்டத்துக்கு மேலானதல்ல.
இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி சார்பில் சரத் வீரசேகர தலைமையிலான குழு பங்குபற்றி வருகின்றது. மனித உரிமைகள் சபையில் நேற்று நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
30/1 தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும் விதம் பற்றி மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் சயிட் அல்ஹூசைன் தனது வாய்மூல அறிக்கையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்ட மனித உரிமைகள் சபை ஆணையாளரின் அறிக்கைக்கு எதிராக நான் இரண்டு அறிக்கைகளை 2014ஆம் ஆண்டு மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்திருந்தேன். அதில் அனைத்து விடயங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.2015ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்திருந்த 30/1 கீழ் தீர்மானத்துக்கு இலங்கை அயலுறவுத்துறை அமைச்சு இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதற்கு அரச தலைவரின் அனுமதி பெறப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றின் அனுமதியும் பெறப்படவில்லை.
இணக்கப்பாடற்ற அறிக்கையைத் தொடர்ந்து செயற்படுத்துவது மனித உரிமைகள் சபையின் சட்டங்களை மீறுவதாகும். அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளையும் மீறும் செயற்பாடாகும் -– என்றார்.