இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்படாது என அந்த விருதினை முடிவு செய்யும் ‘சுவீடன்் அகாடமி’ நேற்று அறிவித்துள்ளது. நோபல் பரிசு என்பது உலகளவில் மிக உயரிய, பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருது 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகப்போர்கள் நடந்து வந்த காலங்களில் 1915, 1919, 1925, 1926, 1927 மற்றும் 1949 ஆகிய ஆறு ஆண்டுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதுதவிர கடந்த 1935 ஆண்டு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்பதால் பரிசு அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசை முடிவு செய்யும் சுவீடன் அகாடமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால், இந்த ஆண்டு இந்த பரிசு அறிவிக்கப்படாது என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த அகாடமி பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த அகாடமியில் உறுப்பினராக உள்ள கதாரினா பிராஸ்டன்சன் என்பவரின் கணவர், ஜீன்-கிளாட் அர்னால்ட் என்பவர் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டினை அகாடமி கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.