இறுதி சடங்கில் பங்கேற்ற 24 நபர்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
நைஜீரியா நாட்டில் இறுதி சடங்கில் பங்கேற்ற பெண்கள் உள்பட 24 பேரை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் Adamawa மாகாணத்தில் உள்ள கூடா என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று உள்ளூர் தலைவர் ஒருவரின் இறுதி சடங்களில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது, மோட்டார் வாகனங்களில் வந்த போகோ ஹாரம் தீவிரவாதிகள் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான Moses Kwagh என்பவர் பேசியபோது, ‘இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமுற்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கு பிறகு சிலர் மாயமாக காணாமல் போயுள்ளனர்.
கூட்டத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வீடுகளை தீயிட்டு எரித்தது மட்டுமின்றி, உணவு பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.