விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், மரியன் சிலிச்சை எதிர்த்து ஆடவுள்ளார். இப்போட்டியில் வெற்றிபெற்றால், மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைப்பார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இன்று சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதுகிறார். இப்போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றால், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறை வென்ற வீரர் என்ற சாதனையையும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 19 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைப்பார். மேலும் 36 வயதை நெருங்கும் ரோஜர் பெடரர், விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றால், மிக அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைப்பார். இதற்கு முன்னர் அமெரிக்க டென்னிஸ் வீரரான அர்தர் ஆஷ், 32 வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்துள்ளது.
30 ஆட்டங்களில் வெற்றி
கடந்த ஆண்டு காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் இருந்த பெடரர், இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த ஜனவரி மாதம், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அவர், அதைத்தொடர்ந்து சிறிய அளவிலான போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டு அவர் ஆடிய 32 ஆட்டங்களில் 30-ல் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விம்பிள்டன் போட்டியில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே வேகத்தில் அவர் இறுதிப் போட்டியிலும் வென்று சாதனை படைப்பார் என்று டென்னிஸ் ரசிகர்கள் நம்புகின்றனர்.
விம்பிள்டனில் தான் மோதவுள்ள 11-வது இறுதிப் போட்டி குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரோஜர் பெடரர், “கடந்த ஆண்டில் காயத்தால் அவதிப்பட்டு சரியாக ஆடமுடியாமல் கஷ்டப்பட்டேன். இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது எனக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்கள் எனக்கு கனவுப் பயணமாக அமைந்தது. விம்பிள்டன் போட்டியை நான் மிகவும் விரும்புகிறேன். இதில் சாதனை படைப்பது மிகப்பெரிய விஷயம். அப்படி சாதனை படைக்க முடிந்தால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
ரோஜர் பெடரர், இதுவரை மரியன் சிலிச்சுக்கு எதிராக 7 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளார். இதுபற்றி கூறும் பெடரர், “சிலிச்சுக்கு எதிராக அதிக போட்டிகளில் வென்றுள்ளது எனக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் இறுதிப் போட்டியில் அவரை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. கடுமையாக போராடவேண்டி இருக்கும்” என்றார். ரோஜர் பெடரருக்கு எதிராக இன்றைய போட்டியில் மோதும் மரியன் சிலிச்சுக்கு விம்பிள்டனில் இது முதலாவது இறுதி ஆட்டமாகும். கோரான் இவானிசெவிக்குக்கு பிறகு விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் 2-வது குரோஷிய வீரர் என்ற பேருமையுடன் அவர் களம் இறங்குகிறார். இந்த விம்பிள்டனில் இதுவரை எதிராளிகள் தொட முடியாதவாறு சர்வீசில் 130 ஏஸ்களை பறக்கவிட்டது அவரது சாதனையாக உள்ளது.
இன்றைய இறுதி ஆட்டம் குறித்து கூறியுள்ள சிலிச், “இது ரோஜர் பெடரரின் சொந்த மைதானத்தைப் போன்றது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மைதானம் அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம். இங்கு அவரை வெற்றிகொள்வது என்பது ஒரு மலையில் ஏறுவதைப் போன்று கடினமானது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் கடுமையாக போராடி அவரை வெற்றிகொள்ள முயல்வேன்” என்றார். – ஏஎப்பி