பேர்மிங்ஹாம் 2022 விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளுக்கான கடைசி நாளான ஞாயிற்றுகிழமை (07) இலங்கை சார்பாக பங்குபற்றிய கடைசி போட்டியாளர்கள் சாரங்கி சில்வாவும் சுமேத ரணசிங்கவும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பெண்களுக்கான நீளம் பாய்தலில் தனது சொந்த தேசிய சாதனையை நெருங்கத் தவறிய சாரங்கி சில்வாவின் பொதுநலவாய விளையாட்டு விழா பதக்கக் கனவு கலைந்துபோனது.
அத்துடன் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய சுமேத ரணசிங்கவும் தனது சொந்த சிறந்த தூரப் பெறுதியை அண்மிகத் தவறினார்.
பேர்மிங்ஹாம், அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நிறைவுபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.07 மீற்றர் தூரம் பாய்ந்த சாரங்கி 13 வீராங்கனைகளில் கடைசி இடத்தைப் பெற்று பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
அவர் தனது முதலாவது முயற்சியில் 6.26 மீற்றர் தூரம் பாய்ந்த போதிலும் அந்த முயற்சி தவறான பாய்தல் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2 முயற்சிகளில் அவர் முறையே 6.00 மீற்றர், 6.07 மீற்றர் தூரங்களைப் பாய்ந்தார்.
அவரது முதல் 3 முயற்சிகளில் அடைவு மட்ட தூரப் பெறுதியை நெருங்காததால் அவருக்கு கடைசி 3 வாய்ப்புகள் அற்றுப் போனது.
அப் போட்டியில் நைஜீரிய வீராங்கனை எசே ப்ரம் 7.00 மீற்றர் தூரம் பாய்ந்து பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அவுஸ்திரேலியாவின் பறூக் புஷ்க்வெல் 6.95 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த வெள்ளிப் பதக்கத்தையும் கானாவின் டிபோரா அக்வா 6.94 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
சுமேதவுக்கு ஏமாற்றம்
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 2ஆவது முயற்சியில் 70.77 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சுமேத ரணசிங்க, 13 வீரர்கள் பங்குபற்றிய போட்டியில் 10ஆவத இடத்தைப் பெற்றார்.
முதல் முயற்சியில் 70 மீற்றர் தூரத்தை 0.78 சென்றி மீற்றர்களால் தவறவிட்ட சுமேத அடுத்த 2 முயற்சிகளில் முறையே 70.77 மீற்றர், 70.45 மீற்றர் தூரங்களைப் பதிவு செய்தார்.
அவர் மூன்று முயற்சிகளில் அடைவு மட்டத்தை எட்டத் தவறியதால் கடைசி மூன்று முயற்சிகளுக்கான வாய்ப்பை இழந்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 90.18 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார்.
க்ரனேடாவின் அண்டர்சன் பீட்டர்ஸ் (88.84 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் கென்யாவின் ஜூலியஸ் யேகோ (85.70 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பேர்மிங்ஹாமில் ஜூலை 28ஆம் திகதி ஆரம்பமான 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா, திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள முடிவு விழா வைபவத்துடன் நிறைவடையவுள்ளது.
ஸ்கொஷ் கோப்பை பிரிவில் இலங்கை வெற்றி
ஸ்கொஷ் போட்டியில் கோப்பைக்கான கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கயானாவின் ஜேசன் ரே கலீல் – ஏஷ்லி கலீல் ஜோடியினரை எதிர்த்தாடிய இலங்கையின் ஷமில் வக்கீல் – சினாலி சனித்மா ஜோடியினர் 2 நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.
இரண்டு செட்களிலும் தலா 11 – 8 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை ஜோடியினர் வெற்றி பெற்றனர்.