நாட்டில் கொவிட் தொற்றாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்று பரவல் ஆரம்பித்த நாள் முதல் கடந்த 15 மாதங்களில் நேற்று அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவாகின. நேற்று வியாழக்கிழமை 214 கொவிட் மரணங்கள் பதிவானதாக இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இலங்கையில் நாளொன்றில் 200 க்கும் அதிக கொவிட் மரணங்கள் பதிவானமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
உறுதிப்படுத்தப்பட்ட 214 மரணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 151 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கு குறைந்தவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் அதற்கமைய கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8371 ஆக உயர்வடைந்துள்ளது.
இதே வேளை இன்றையதினம் மாலை வரை 3812 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 416 182 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 353 191 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 54 834 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையின் காரணமாக வைத்தியசாலைகளின் கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்கு தொற்று அறிகுறிகளற்ற தொற்றாளர்களுக்கு வீடு;களிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது.
அதற்கமைய கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து நேற்ற வரை 36 220 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.
இவர்கள் தவிர தற்போது 14 154 தொற்றாளர்களுக்கு தற்போது வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் , இவர்களில் 68 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்திய நிபுணர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். இதுவரையில் வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட தொற்றாளர்களில் 435 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அயந்தி கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.