ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சு.க. இதனை அறிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காமலிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னர் அறிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும் சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை(15) கடிதமொன்றின் ஊடாக , இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவித்திருந்தார்.
இது குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு (16) திங்கட்கிழமை சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடவிருந்த நிலையில் , பின்னர் அது இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து கலந்துரைடினர்.
இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் வினவிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரது எதிர்கால பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தினார். அவை தொடர்பில் சு.க. கட்சி மட்டத்தில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்.
அதே போன்று எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பில் பிரதமர் வினவினார். நாட்டு மக்களின் நலன் மற்றும் பொருளாதார மேம்பாடுகளுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினோம்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் கட்சி மட்டத்தில் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவித்தோம்.
மேலும் பாராளுமன்றத்தில் பெண் பிரநிதித்துவம் குறித்தும் பிரதமர் இதன் போது வலியுறுத்தினார். பிரதி சபாநாயகர் வேட்பாளராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் , அவருக்கு ஆதரவளிக்குமாறும் பிரதமர் எம்மிடம் கேட்டுக் கொண்டார் எனத் தெரிவித்தார்.