ஐரோப்பியக் (யூரோ) கிண்ண கால்பந்தாட்டத் தொடர் 2020 இன் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. 24 அணிகள் பங்கேற்றிருந்த ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சொந்த கோலைப் போட்ட சுவிட்ஸர்லாந்து
ரஷ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில், நேற்றிரவு நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் சுவிட்ஸர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் 8 ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்தின் சக்கரியா சொந்த கோலொன்றைப் போடவே ஸ்பெயன் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
போட்டியில் ஸ்பெய்ன் அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்த போதிலும், சுவிட்ஸர்லாந்து அணி கோலொன்றை போடுவதற்கு பல்வேறு விதத்திலும் முயற்சி செய்தே வந்தது. இதன் பலனாக சுவிட்ஸர்லாந்து அணி 74 ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் சக்ரி கோலொன்றைப் போடவே கோல் கணக்கு சமநிலையானது.
சுவிஸ் வீரருக்கு சிவப்பு அட்டை
சற்று நேரம் கழித்து சுவிட்ஸர்லாந்தின் ப்ரியுலர் தவறிழைத்தன் காரணமாக அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்படவே, ஸ்பெய்ன் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவ்வணியின் நட்சத்திர வீரர் ஜெரார்ட் மொரெனோ வீணாக்கினார்.
90 நிமிடங்களைத் தாண்டியும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படாததால், மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளுமே கோல் போடவில்லை. இதனால் பெனால்டி முறையில் வெற்றியாளர் யார் என தீர்மானிக்கப்பட்டது.
பெனால்டி உதையில் ஸ்பெய்ன் வெற்றி
ஸ்பெய்ன் அணி 3க்கு 1 என்ற பெனால்டி கோல் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இதில், இரண்டு அணியின் கோல் காப்பாளர்களும் சிறப்பாக பந்துகளை தடுத்திருந்தனர். எனினும், ஸ்பெய்ன் அணியின் கோல்காப்பாளர் உனாய் சைமன் இரண்டு பெனால்ட்டி உதைகளை தடுத்து தமது அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணி கடைசி 45 நிமிடங்கள் வரையில் 10 வீரர்களுடனேயே விளையாடியிருந்ததுடன், ஸ்பெய்ன் அணிக்கு மேலதிகமாக கோல் அடிக்க விடாதிருந்தமை பாராட்டத்தக்கது.
இத்தாலி வெற்றி
இப்போட்டியை அடுத்து ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் கால்பந்தாட்ட தரவரிசையின் முதல் நிலை அணியான பெல்ஜியம் அணியை இத்தாலி அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இரண்டாவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானது.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் அணிகள் எதிர்வரும் 6 ஆம் திகதியன்று மோதிக்கொள்ளவுள்ளது.
இன்றை போட்டிகள்
மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் நடைபெறும் முதல் போட்டியில் செக் குடியரசு அணியை டென்மார்க் அணி எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் உக்ரைன் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.