இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று நிறைவுக்கு வந்த முதலாவது 4 நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி 2 தினங்களில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை ஏ அணியின் வெற்றி மழையினால் தடுக்கப்பட்டது.
இலங்கை ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 333 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 7 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் ஜமாய்த்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 2ஆவது இன்னிங்ஸில் பிரகாசிக்கத் தவறியது. மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
ஜொஷ் பொஹானன் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார்.
இலங்கை ஏ அணி சார்பாக மிலான் ரத்நாயக்க, லக்ஷித்த முனசிங்க ஆகிய இவரும் சிறப்பாக பந்துவீச்சினர்.
போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (03) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்கள் என்ற நிலையிலருந்து தொடர்ந்த இலங்கை ஏ அணி 9 விக்கெட்களை இழந்து 663 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 2ஆவது இன்னிங்ஸை டிக்ளயார்ட் செய்தது.
நிஷான் மதுஷ்கவும் நிப்புன் தனஞ்சயவும் தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 219 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நிப்பன் தனஞ்சய சதம் குவித்து ஆட்டமிழந்த பின்னர் இலங்கை ஏ அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
போட்டியின் 3ஆம் நாளன்றே இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்த மதுஷ்க 241 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை ஏ 1ஆவது இன்: 136 (சதீர சமரவிக்ரம 43, லக்ஷித்த மனசிங்க 26, ஓஷத பெர்னாண்டோ 21, மெத்யூ ஃபிஷர் 34 – 5 விக்., லியாம் பெட்டர்சன் வைட் 51 – 3 விக்.)
இங்கிலாந்து லயன்ஸ் 1ஆவது இன்: 467 (டொம் ஹெய்ன்ஸ் 118, ஹசீப் ஹமீத் 81, அலெக்ஸ் லீஸ் 56, மெத்யூ ஃபிஷர் 53, ஜொஷ் பொஹான்சன் 42, லியாம் பெட்டர்சன் வைட் 41, அம்ஷி டி சில்வா 59 – 3 விக்., லசித் எம்புல்தெனிய 159 – 3 விக்.)
இலங்கை ஏ 2ஆவது இன்: 663 – 9 விக். டிக்ளயார்ட் (டில்ஷான் மதுஷ்க 241, நிப்புன் தனஞ்சய 128, ஓஷத பெர்னாண்டோ 114, நுவனிது பெர்னாண்டோ 80, லக்ஷித்த மனசிங்க 73, ஜெக் கார்சன் 173 – 4 விக்., லியாம் பெட்டர்சன் வைட் 231 – 3 விக்.)
இங்கிலாந்து லயன்ஸ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 333 ஓட்டங்கள்) மழையினால் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 221 – 7 விக். (ஜொஷ் பொஹானன் 57, ஜெக் ஹெய்ன்ஸ் 43, ஜெமி ஸ்மித் 39 ஆ.இ., மிலான் ரத்நாயக்க 31 – 3 விக்., லக்ஷித்த மனசிங்க 55 – 2 விக்.)