ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ஜங்கய்யபேட்டையை சேர்ந்தவர் முக்தியால கிரிஜம்மா (வயது 71). இவருக்கு கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு சேர்ந்த அடுத்த 3 நாட்களில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து பிணத்தை வழங்கினர்.
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் (45) தெலுங்கானா மாநிலம் கம்மம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முக்தியால கிரிஜம்மாவிற்கும், அவரது மகன் ரமேஷிற்கும் பிரார்த்தனை கூட்டம் அவர்களது வீட்டில் நடந்தது.
அப்போது திடீரென முக்தியால கிரிஜம்மா அங்கு வந்தார். விஜயவாடா அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்ததாக அவர் கூறினார். இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நிலையில் உயிருடன் முக்தியால கிரிஜம்மா வீட்டிற்கு வந்ததை பார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விசாரணை செய்தபோது விஜயவாடா அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போதே அவர் இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை வழங்கியுள்ளனர். அவரது முகமும் முக்தியால கிரிஜம்மாவை போல் இருந்ததால் உறவினர்கள் அடக்கம் செய்தது தெரிய வந்தது.
டாக்டர்கள் அலட்சியத்தின் காரணமாக முக்தியால கிரிஜம்மா இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை உறவினர்களுக்கு வழங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.