இரு பல்கலைக் கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி கனடாவில் இடம்பெற்ற கண்டன பேரணி!
விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றார்கள். இரு தமிழ் மாணவர்களின் படுகொலை என்பது ஒரு இன அழிப்பின் தொடர்ச்சியாகவே எம்மால் பார்க்க முடிகிறது. இக் கொலைக்கு இலங்கை அரசு ஒரு நீதியான விசாரணையையோ அல்லது அதற்கான பரிகாரத்தையோ வழங்குவார்கள் என நாம் நம்பவில்லை. இப் படுகொலைக்கான விசாரணையில் கனடா, அனைத்துலக சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு; ஒரு அனைத்துலக விசாரணைக்கான சூழ் நிலையை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இப்படுகொலையைக் கண்டித்தும் அனத்துலக விசாரணையை வலியுறுத்தியும் கனடிய தமிழர்களாக கண்டன பேரணியில் அணிதிரண்டனர்.
புதன் கிழமை – ஓக்டொபர் 26, 2016 மாலை 3 மணி முதல் 7 மணி வரை டண்டாஸ் சதுக்கத்தில் கண்டன பேரணியில் கலந்து கொண்ட மக்கள் மாலை 6:30 மணிக்கு நினைவு விளக்கேந்தி படுகொலை செய்யப்பட்ட இரு மாணவர்களையும் நினைவு கூர்ந்தனர்.
இன அழிப்பின் ஆரம்ப காலத்தில் இருந்தே இலங்கை அரசு சர்வதேசத்தின் பார்வையை மழுங்கடிப்பதற்காக பல விசாரணைக்குழுக்களை அமைத்துஇ விசாரணை என்ற பெயரில் காலத்தைக் கடத்தி இதுவரையும் எந்த ஒரு விசாரணயும் எந்த ஒரு நீதியையும் தமிழருக்கு வழங்கியதாக சரித்திரம் இல்லை. நாம் தொடர்ச்சியாக கனடாவிடமும், அனைத்துலகத்திடமும் ஈழத்தமிழர்களின் இன அழிப்பின் தொடர்ச்சியை முறையிடவேண்டியது அவசியமாகின்றது.
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை அரங்கேறி 7 ஆண்டுகளாகியும் எம் ஈழ மண்ணில் தொடர்ந்து இடம் பெறுகின்ற இனப்படுகொலைகளுக்கான நீதியான தீர்வை கொடுக்க முன்வராத சர்வதேசத்திடம் நீதி வேண்டி உலகத் தமிழினம் உலகெங்கும் இருந்தும் குரல் கொடுத்து போராடி வரும் காலகட்டத்தில் இவ் எழுச்சிக்கு வலுச் சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் டண்டாஸ் சதுர்க்கத்தில் போரணியில் கலந்து கொண்டனர்.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703