ஒரு பயிற்சியில் ஐம்பது வயது ஆன ஆண் சொன்னார். ‘திருமணமான புதிதில் மனைவி கண்ணைக் கசக்கி, என் அம்மா பற்றிப் புகார் சொன்னாள். அன்றைக்கு முடிவெடுத்தேன், இந்தப் பெண்ணைக் கஷ்டப்படுத்தக் கூடாதென்று. வேறு ஊருக்கு இடமாற்றம் பெற்று வந்துவிட்டேன். என் குடும்பத்தோடு உறவு விட்டுப்போயிற்று. என் மனைவிக்காக அதைச் செய்தேன். இன்று அவள் தன் குடும்பத்து மனிதர்களோடு நல்ல உறவில் இருக்கிறாள். எனக்குத்தான் யாருமில்லை” என்றார்.
கோளாறு அந்த பெண்ணிடம் மட்டும் இல்லை, ஆணிடமும்தான். மனைவிக்குக் கணவனின் பெற்றோருடன் பிரச்சினை என்றால், மனைவியை அவர்களிடம் அன்பாக இரு என்று கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், எனக்கு நீயும் முக்கியம், அவர்களும் முக்கியம். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நீ அவர்களைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம். ஆனால், நான் அவர்களோடு பேசுவதை, பார்ப்பதை நீ தடுக்க முடியாது. உனக்கும் எனக்குமான உறவைப் போலவே எனக்கும் அவர்களுக்குமான உறவு என்ற ஒன்று உள்ளது என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
ஆணோ, பெண்ணோ ஒருவர் மேல் மற்றொருவர் புகார் சொல்வதல்ல வாழ்க்கை. அதிகாரத் தராசின் முள் ஒரு பக்கமாக சாயலாம். மாறி மாறிச் சாயலாம். இரண்டு தராசுத் தட்டிலும் சமமாக எடை வைக்கும்போது தராசு சமநிலையில் இருக்கும். இதுதான் வாழ்க்கை. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அன்போடும் மரியாதையோடும் நடத்தினால் வாழ்க்கை எனும் நியாயத் தராசு சமநிலையில் இருக்கும்.