மதுரை மகாலெட்சுமி மில்லின் அனைத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். நம்மிடம் பேசிய அவர்கள், “மதுரை பசுமலையில் செயல்பட்டு வந்த மகாலெட்சுமி மில் கடந்த 1996-ம் ஆண்டு நிர்வாக சீர்கேட்டினால் மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய 917 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பல குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றது. தொழிற்சங்கங்கள் போராட்டங்களும் வழக்குகளும் நடத்திய நிலையில், இதுவரை எந்தப் பலன்களும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. தொழிலாளர் நலத்துறை தலையிட்டும் நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இந்த நிலையில் ஆலையின் 10 ஏக்கர், 90 சென்ட் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் தற்போது கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தை விற்பனைசெய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பலன்களையும் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்று கலெக்டரிடம் கேட்டுள்ளோம். எந்தவொரு பணப்பலன்களையும் பெறாமல் தொழிலாளர்கள் சிலர் மரணமடைந்துள்ளனர். அந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றனர். தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்தும், அது நடைமுறைக்கு வராமல் இருப்பதாக வருத்தப்பட்டார்கள்.