இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம்போல் அம்மனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவினை முன்னிட்டு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஆடி பெருந்திருவிழா அரசு உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் தமிழக அரசு, திருவிழாக்கள் நடத்த தடைவிதித்துள்ளது. இதையடுத்து திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா தலைமை தாங்கினார். சாத்தூர் தாசில்தார் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தேவி, இருக்கன்குடி கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக நடைபெறும் ஆடி பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தங்குவதற்கோ, கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் கிடா வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. ஆடு கோழிகள் பலியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசங்கள் அணிந்து கொண்டு உரிய சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.