இராணுவ முகாமிற்கு அருகில் மனித புதைகுழி – பல எச்சங்கள் கண்டுபிடிப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் அருகில் உள்ள மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் புதைகுழியின் முதல் நாள் அகழ்வுப் பணிகள் இன்று பிற்பகல் நிறைவடைந்ததுள்ளது.
இராணுவ முகாமுக்கு அண்மித்த பகுதியிலுள்ள தனியார் காணிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி அகழ்வு இன்று காலை சுமார் 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4.00 மணியுடன் முதல் நாள் நிறைடைந்துள்ள நிலையில் நாளை (21) இரண்டாம் நாள் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய அகழ்வின் போது குறித்த இடத்தில் இருந்து பெறப்பட்ட மண் அரிக்கப்பட்டு சிறு சிறு எழும்பு எச்சங்கள் பெறப்பட்டதாகவும், அகழ்வின்போது குறித்த இடத்தில் யன்னல் இரும்பு கம்பிகள் பெறப்பட்டதாகவும் தெரியவருகின்ற நிலையில் நாளையும் மேலதிக அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இராணுவ முகாம் அண்மித்த பகுதியிலுள்ள பல தனியார் காணிகள் இராணுவத்தினரால் கடந்த 2014ம் ஆண்டு விடுவிற்க்கப்பட்ட நிலையில் தற்பொழும் 40க்கு மேற்ப்பட்ட தனியார்கள் காணிகள் உட்பட முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயமும் இராணுவத்தின் கையகப்படுத்தலின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி 02ம் திகதி வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உட்பட மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ்.பெரேரா, சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மாத்தளை சட்ட வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியரெட்ண, புவி சரிதவியல் அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த, கண்டி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அசித்த கீர்த்தி குறித்த இடத்தை பார்வையிட்டபோது அகழ்வுக்குரிய திகதி 20 மற்றும் 21 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழுவினரினால் இன்றைய முதல்கட்ட அகழ்வு பணிக்குரிய வேலைகள் நிறைவடைந்து அகழ்வுகள் நடைபெற்றது.
கடந்த 2016.10.30ம் திகதி முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திருமதி வான்மதி உதயகுமார் என்பவரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒருவித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும் நீதிவான் உட்பட சட்ட வைத்திய அதிகாரிகள் சகிதம் குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் ஒருசில எழும்புத் துண்டங்களை மேலதிக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று மாதம் கடந்த நிலையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றது.