கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு செய்யப்பட்டது.
கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளரால் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு அணைக்கட்டு காணப்படும் நிலையில் அந்த அணைக்கட்டை அகற்றியபோதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அகழ்வுப் பணிகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணியின்போது ஒரு கைக்குண்டு, தொடர்பாடல் சாதனம், இரண்டு தலைக்கவசங்கள், ரவைக்கூடுகள், உடைகள் மற்றம் இராணுவத்தினர் பயன்படுத்தும் உணவு பொதிகள் உள்ளிட்ட பொருட்களின் எச்சங்களுடன், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்டவை அனைத்தும் 25 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் எனவும், மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தடய பொருட்கள் அனைத்திலும் 97ம் ஆண்டுக்கு முற்பட்ட திகதியிடப்பட்ட பொருட்களாகவே காணப்பட்டுள்ள நிலையில் இரண்டும் ஒப்பீட்டளவில் ஒரே காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news