ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அராஜகக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் அனைவரையும் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்ட கோ கம’ ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இதன் போது பல இடங்களில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஆர்ப்பாட்ட ஸ்தளங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு எச்சரித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
‘நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான போராட்டத்தை நடத்தி வரும் பிரஜைகள் அனைவரையும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்காக அராஜகக்காரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.