இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா. எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தங்களுக்கு நீதி கிடைக்குமென சிந்திப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், ஐ.நா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் எனவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐ.நா.வின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்ற வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது என்பது குறித்து எந்த வித சந்தேகமும் இல்லை. யுத்த குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐ.நா.வின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும் இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.