இராணுவத்தினரை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு!
இராணுவத்தினரை எந்தவொரு பாடசாலைக்குள்ளும் நுழையாமல் தடுக்கும் அதிகாரம் மாகாண சபையின் முதலமைச்சருக்கு உண்டு என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூரில் கடற்படை அதிகாரியொருவரின் அத்துமீறலை கடும் தொனியில் சுட்டிக்காட்டிய சம்பவம் தொடர்பில் பிரதமருடன் கருத்துப் பரிமாறிக் கொண்டபோது அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கிரியெல்ல, முதலமைச்சர் கோபமாக பேசிவிட்டார் என்பதற்காக ராணுவ முகாம்களுக்குள் அவர் நுழையத் தடைவிதித்து ராணுவத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சருக்கு ராணுவ முகாம்களுக்குள் நுழைய எந்தவித தேவையும் இல்லை.
அதே நேரம் பதிலுக்கு ராணுவத்தினர் எந்தவொரு பாடசாலைக்குள்ளும் நுழையக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டால் ராணுவத்தினர் என்ன செய்ய முடியும்? ஏனெனில் அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு என்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வகையில் தீர்மானங்களை எடுக்க முடியாது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. ஜனாதிபதி வந்த பின்னர் இதுகுறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.