நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகள் மீதும் எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. இன்று நடக்கவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் திகதி இறுதி செய்யப்படும் என்று தெரியவருகின்றது.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை மற்றும் மகிந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள் ளன. இந்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்கு பெப்ரவரி 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முடிந்தால் இந்த அறிக்கைகள் மீதான விவாதத்தை உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நடத்திக்காட்ட வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 8ஆம் திகதி விவாதத்தை நடத்தத் தீர்மானித்திருந்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பரப்புரை 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவ தால், 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலை பிற்போட வேண்டி ஏற்படும் என்று தேர்தல்கள்
திணைக்களம் எச்சரித்திருந்தது.அதையடுத்து 7ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக சபாநாயகர் கரு தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.