ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுக்கிடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்சல்ஸிலுள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையானது, எதிர்வரும் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
நாம் களத்தில் இறங்கி வேலை செய்து, இப்பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக்க வேண்டியது அவசியமாகும் என பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றங்களை அடைவதற்கு நாம் எமது நிலைப்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் பொருளாதார மற்றும் சமூக இடையூறுகளை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தைகளின் போது, பிரித்தானிய நிதிப் பொறுப்புகள் தொடர்பில் பிரித்தானியாவின் அணுகுமுறை குறித்த மேலதிக விபரங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சாளர், பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சரை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.