கேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்சில் 208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. காயத்தால் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச இயலாத நிலையில், மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. இந்தக் கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தமுறையும் சொதப்பினர். இந்திய அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்குக் கைகோத்த அஷ்வின் – புவனேஷ்வர் குமார் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. அஷ்வின், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.