இரசாயனக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்
இறுதி யுத்தத்தின் போது இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘தி காடியன்’ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தின் போது இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம்.
கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணிக் குண்டுகளின் பாகங்களை மீட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் யுத்த சூனிய வலயத்தில் இருந்தே இவ்வாறு கொத்தணிக் குண்டுகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ‘தி காடியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய கொத்தணிக் குண்டுகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுப் பகுதிகளில் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆனையிறவு பச்சிலைப்பள்ளி எனும் இடத்தில் கொத்தணிக் குண்டுகளின் 42 பாகங்களை மீட்டுள்ளதாக அரசசார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், ‘தி காடியன்’ தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது படையினரால் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஆனால் அதனை அன்றைய அரசாங்கம் முற்றுமுழுதாக மறுத்திருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது கொத்தணி குண்டுகளின் பாகங்கள் யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
காணாமல்போன பிரகீத் எக்னெலிகொட இதுதொடர்பான செய்தியினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டதாகவும், இதனாலேயே அவர் காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இவ்வாறான சூழலிலேயே தற்போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பெருமளவானோர் அங்கவீனர்களாகினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம்பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பெரும் அழிவுகள் திட்டமிட்டவகையில் நடத்தப்பட்டிருந்தன.
ஐ.நா. வின் அறிக்கையின் படி இறுதியுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் பலியாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று வன்னியில் வசித்து வந்த பொது மக்களின் கணக்கெடுப்பையும், யுத்தத்தின் பின்னர் வெளியேறிய பொதுமக்களின் கணக்கெடுப்பையும் கருத்தில் கொண்டு தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டியுமிருந்தார்.
ஆனால் யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினர் தெரிவித்து வந்தனர்.
யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் வன்னியில் உள்ள வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் அன்றைய அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் நேரடியாக கண்ட சாட்சிகளின் படி அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டமை நிரூபணமாகியிருக்கின்றது.
இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமையும், யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை குறித்த தகவல்கள் வெளியானதையடுத்தே இவ்விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்திருந்தது.
அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்தன.
அரசாங்கமானது யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றமையால் 2012ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை முதன்முதலில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு 2014 ஆம்ஆண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.இதனையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருந்தது.
இதற்கிணங்க இலங்கையில் யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து கலப்பு பொறிமுறையின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கிணங்கவே கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டு உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறியிருந்தது.
தற்போதைய நிலையில் யுத்தத்தின் போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளமையினால் அது குறித்தும் நிச்சயமாக விசாரணை நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
ஆனாலும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்வதற்கு தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் பின் நிற்பதனால் இத்தகைய விசாரணைகள் உரிய பயனைத்தருமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
இவ்விடயம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்பு இல்லாமல் போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதனால் எங்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை. உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு நிபுணர்களையும், சேர்த்துத்தான் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு எதிராக தற்போது அரசாங்கம் கருத்து தெரிவித்து வருகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
அதாவது குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் எண்ணத்துடன் தான் இவ்வாறான கூற்றுக்கள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு நீதிபதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறுவதன் அர்த்தமென்னவென்றால் இந்த விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடாது என்பதேயாகும்.
எனவே, சர்வதேச நீதிபதிகளற்ற உள்ளக விசாரணை எமக்கு நன்மைதரப்போவதில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே இறுதியுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான யுத்தக்குற்றமாகும். சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவது என்பது விரோதமானதாகும்.
எனவே, அவ்வாறான குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும்.
தற்போது பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள கொத்தணிக் குண்டு தொடர்பான தகவல்கள் உண்மையானவையா? அதில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களின் நம்பகத்தன்மை என்ன என்பன குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி பல்வேறு வகையான தகவல்களை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பியிருந்தது.
இத்தகைய ஆதாரங்களே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதற்கான அழுத்தங்களாக அமைந்திருந்தன என்பதை மறுக்க முடியாது.
இதேபோல் தற்போது பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள கொத்தணிக்குண்டு விவகாரம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
எதிர்காலத்தில் நடத்தப்படும் உள்ளகப் பொறிமுறை ஊடான விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
எனவே தற்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை நிலையை உலகிற்கு அறிவிக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.