இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரெபல்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் முக்கிய படைப்பாளுமை மிக்கவருமான பா. ரஞ்சித் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் ஆர். எஸ். நிகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமீதா பைஜூ, வி பி வெங்கிடேஷ், ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார், சித்து குமார் மற்றும் ஆஃப்றோ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே இன அரசியல் மற்றும் மொழி அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர்கள் டி. சிவா மற்றும் தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொழி அரசியலையும், தமிழர் இன அரசியலையும் உணர்வுபூர்வமாகவும் கமர்சியல் அம்சங்களுடனும் விவரித்திருக்கிறேன். இந்த படத்தின் உருவாக்கத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முழுமையான சுதந்திரம் அளித்ததால்.. எம்முடைய விருப்பப்படி இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இது எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் கதையை அதன் அரசியலை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவும், படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கியதற்காகவும் ஜீ. வி பிரகாஷ், மமீதா பைஜூ உள்ளிட்ட நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதனிடையே இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ‘தமிழனா பொறந்தது தப்பா சார்!’ என ஜீ.வி. பிரகாஷ் கேட்கும் கேள்வி.. ரசிகர்களை படத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது என்பதும், இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் 200 பேருடன் சண்டை செய்து அவர்களை வீழ்த்துகிறார். இதற்கான காரணம் பொருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது என பட குழுவினர் சொல்லி இருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.