டிஜிட்டல் திரை நட்சத்திர நடிகரான ஹரி பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை லொஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் நடிக்கும் ஏனைய நட்சத்திர நடிகர்கள் நடிகைகளை பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். குலோத்துங்கவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை இன்வேட் மீடியா எனும் நிறுவனம் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நிதின் மனோகர் மற்றும் என். ராமசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரபல யூட்யூபர் ஹரி பாஸ்கரும், நடிகை லொஸ்லியாவும் இணைந்து தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.