தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான கே. விஸ்வநாத் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி ஹைதராபாத்தில் இன்று காலை உயிரிழந்தார்.
1930 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த கே. விஸ்வநாத், சென்னையில் உள்ள வாகினி ஸ்டுடியோவில் ஒலிச் சேர்க்கைப் பிரிவில் உதவியாளராக பணியாற்ற தொடங்கினார்.
திரைப்படத்தின் நுட்பங்களை கற்றுக்கொண்டு, 1951 ஆம் ஆண்டில் ‘ஆத்ம கௌரவம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அவரது இயக்கத்தில் வெளியான ‘சங்கராபரணம்’ இந்திய அளவில் பாரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநராக மட்டுமல்லாமல் ‘குருதிப்புனல்’ எனும் படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
அதனைத தொடர்ந்து ‘முகவரி’, ‘காக்கை சிறகினிலே’, ‘பகவதி’, ‘புதிய கீதை’, ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’, ‘சிங்கம் 2’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கலையுலகில் சிறந்த சேவையாற்றுவதற்காக வழங்கப்படும் உச்சபட்ச கௌரவமான ‘தாதா சாகேப் பால்கே’ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘பத்மஸ்ரீ’ விருது, நந்தி விருது… என ஏராளமான விருதுகளுடன், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் உயரிய கௌரவமும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
92 வயதாகும் இவர் முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி ஓய்வில் இருந்த இவர் இன்று காலை ஹைதராபாத்தில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகம், தமிழ் திரையுலகம் உள்ளிட்ட இந்திய திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்கள்.