பாகிஸ்தான் முன்னாள் பிரமதமர் இம்ரான் கானுக்கு, அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் 2 வார கால பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (ஐகோர்ட்) இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தனக்கு எதிhhன வழக்குத் தொடர்பில் முன்பிணை கோருவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை (09) சென்றிருந்தபோது அவரை துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.
அல் காதிர் அறக்கட்டளையில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொறுப்புடைமை பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 8 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இம்ரான் கைதையடுத்து, அவரின் பிரிஐ கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் குறைந்தபட்சம் 8 பேர் பலியானதுடன் சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், அவரை வீடு திரும்ப அனுமதிக்கவில்லை. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கானை இன்று ஆஜராக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை, இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்லாமாபாத் பொலிஸ் தலைமையக வளாகத்திலேயே ஒரு ‘வதிவாளராக’ தங்கியிருக்குமாறு உத்தரவிட்டது.
இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானார். அவரின் பிணை மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 2 வார காலத்துக்கு இம்ரான் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது