பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்(ஐ.எம்.எப்) இடையிலான ‘பி.டி.ஐ.எம்.எப்’ எனப்படும் ஒப்பந்தத்தினை மேற்கொண்டமைக்காக பாகிஸ்தான் மக்களிடத்தில் இமரான் கான் மன்னிப்புக் கோருவதோடு பிரதமர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி பகிரங்கமாக கோரியிருக்கின்றார்.
“மக்களின் ஆணை பெற்று அவர்களால் தெரிவு செய்யப்பட்டவராக உள்ள பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் தனது தவறை ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. தற்போது அவர் அந்த ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு பதிலாக, எங்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிடும் பிலாவால் பூட்டோ-சர்தாரி இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார் என்று தி நியூஸ் இன்டர்நேஷனல் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தவறானது என்று இம்ரான் கான் ஒப்புக்கொண்டது உண்மையில் அவரது திறமையின்மையை ஏற்றுக்கொள்வதாகவே உள்ளது என்று பூட்டோ-சர்தாரி சுட்டிக்காட்டியுள்ளார். தன்னைப்பொறுத்தவரையில், “சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விட தற்கொலை செய்வது மேலானது” என்று கருதுவதாக அவர் கூறினார்.
“விதிமுறைகள் கடுமையாக இருக்கும் வரை தாமதப்படுத்தி அவர் பாகிஸ்தானை முடக்கும் நிலைமைகளை ஏற்றுக்கொண்டே கையெழுத்திட்டிருக்கின்றார். தற்போது அவர் மக்களிடத்தில் முன்வைத்து தேர்தல் வெற்றிபெற்ற கொள்கைகளிலிருந்து ‘பல்டி’ அடிக்கின்றார். இம்ரான் கான் தவறு செய்கிறார், அந்த தவறுகளை ஒப்புக் கொள்கின்றார், பின்னர் வெளியே சென்று அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார். இது ஒரு நாடு, ஒரு முன்பள்ளி அல்ல” என்று பூட்டோ-சர்தாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் மின்சாரம், எரிவாயு மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலைவாசி உயர்வை மத்திய அரசு மேற்பார்வையிட்டுள்ளது என்றும், உலகளாவிய நிதி அமைப்பின் பிரகாரம் சம்பளம் பெறும் ஒரு சில ஊழியர்களிடத்திலேயே நாட்டின் பொருளாதார தலைவிதி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்” பிலாவால் மேலும் தெரிவித்தார்.
“சர்வதேச நாணய நிதியத்தின் ஆணையின் அடிப்படையில் ரூபாயை மதிப்பிடுவதற்கான இம்ரான் கானின் முடிவு தேசத்திற்கு பேரழிவு தரும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கூறினார். “இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் ஒப்பந்தம் குறித்த அனுமதியை பெற முனைந்திருந்தால் மக்கள் தற்போது பணவீக்க சுனாமியில் மூழ்கியிருக்க மாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டதாக நியூஸ் இன்டர்நேஷனல் மேற்கோள் காட்டியுள்ளது.
“நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வேலையின்மை புள்ளிவிவரங்களுக்கு ‘சட்டவிரோத மற்றும் திறமையற்ற’ ஆளும் கட்சியின் ஆட்சியைக் குற்றம் சாட்டிய பிலாவால், 10 மில்லியன் வேலைகளை உருவாக்குவதாக உறுதியளித்த அக்கட்சி அதற்கு பதிலாக மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்களை வேலையில்லாமல் ஆக்கியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் நாட்டின் கடனில் மூழ்கிய பொருளாதாரத்திற்காக 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு தொடர்பான பூர்வாங்க உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தன. இதுவொரு எதிர்ப்பை முன்னதாக எதிர்த்த பின்னர் பிரதமர் இம்ரான் கான் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடன் வழங்கும் அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சங்கடமான உறவைக் கொண்டுள்ளது, மேலும் உள்நாட்டில் தேசியவாத அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதை அமெரிக்க ஆதிக்கத்தின் ஒரு கருவியாகக் குறிப்பிடுகின்றனர். பாகிஸ்தான் ஏற்கனவே 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டுள்ளது, மேலும் கடந்தகால திட்டங்களை முழுமையாக முடிக்கவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.