இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் 3-வது போட்டியிலாவது வென்று தங்கள் கவுரவத்தைக் காப்பாற்றும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது.
கடந்த ஒருநாள் போட்டியின்போது இந்திய பேட்டிங் வரிசையில் கேப்டன் விராட் கோலி, சில பரீட்சார்த்தமான முயற்சிகளை செய்து பார்த்தார். தனக்கு முன்னால் லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோரை பேட்டிங் செய்ய அனுப்பினார். ஆனால் இலங்கை வீரர் தனஞ்ஜெயாவின் சுழல் பந்து வீச்சு காரணமாக அந்த முயற்சிகள் எடுபடவில்லை. இந்தியாவின் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி, 131 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பு வரை சென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் அதே போன்ற பரீட்சார்த்தமான முயற்சிகளை அவர் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேதார் ஜாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். மேலும் லோகேஷ் ராகுலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இன்னும் ஆடவில்லை. இதனால் அவர்களுக்கு பதில் அஜிங்க்ய ரஹானே, மணிஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல இந்த இரு வீரர்களும் கடந்த இரு நாட்களாக பல மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அதே போல் சாஹல், அக் ஷர் படேல் ஆக்ய இருவரில் யாராவது ஒருவருக்கு பதில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண், மிகச் சிறப்பாக ஆடி வருவது இந்திய அணிக்கு பெரிய அளவில் சாதகமாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் அவருக்கு ஆதரவாக மட்டையை சுழற்றும் பட்சத்தில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் பேசிக்கொண்டிருக்கிறார் மகேந்திர சிங் தோனி. (அடுத்த படம்) பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி பெறும் இலங்கை வீரர்கள். – படம்: பிடிஐ, ராய்ட்டர்ஸ்
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதரன், நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் 18 மாதங்களில் நடக்கவுள்ளதால் பரீட்சார்த்தமான சில முயற்சிகளை செய்து வருகிறோம். கடந்த போட்டியில் பேட்டிங்கில் சில மாற்றங்களைச் செய்து பார்த்தோம். இதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், இந்த பரீட்சார்த்தமான முயற்சிகள் தொடரும். கடந்த போட்டியில் தனஞ்ஜெயா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினார். இதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். அடுத்த போட்டியில் அவரை கவனமாக அணுகுவோம்” என்றார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரங்காவுக்கு பதில் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கபுகேதரா எந்த அளவில் சிறப்பாக செயல்படுவார் என்று புரியாத நிலை உள்ளது. இருப்பினும் தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளவாவது இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனான தினேஷ் சந்திமால் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது. மேலும் கடந்த போட்டியின்போது குணதிலகே காயம் அடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் திக்வெலாவுடன் திருமனே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. கடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய தனஞ்ஜெயா, இன்றைய போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வெற்றியை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் இலங்கை ரசிகர்கள் உள்ளனர்.
இன்றைய போட்டி குறித்து இலங்கை அணியின் கேப்டன் கபுகேதரா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றியை நூலிழையில் தவற விட்டோம். இது ஏமாற்றம் அளித்தாலும், இந்திய அணியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இந்த போட்டி எங்களுக்கு அளித்துள்ளது. இலங்கை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். நான் ஏற்கெனவே மாகாண அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளேன். அந்த அனுபவத்தை வைத்து இலங்கை அணியை வழிநடத்துவேன்.
இவ்வாறு கபுகேதரா கூறினார்