தத்துவ நிலையை தந்து எனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
– ஒளவை (விநாயகர் அகவல்)
விக்கினங்களை தீர்க்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினம், ஒகஸட் மாதம் 31ஆம் திகதி, புதன்கிழமையான இன்றாகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான இந்நாள் இந்துக்களால் ‘விநாயக சதுர்த்தி’ என அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
கல்லாலும் பஞ்சலோகங்களாலும் இறைவனின் திருவுருவம் வடிக்கப்பட வேண்டும் என்கிற ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு, மனித பயன்பாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய மஞ்சள், சாணம், வெறும் களிமண்ணாலும் கூட வடிவம் கொடுத்து வழிபட உகந்த முதலான தெய்வம் விநாயகர் தான்.
கோவில்களில் மட்டுமன்றி, ஆற்றங்கரைகளிலும், வீதியோரங்களிலும் கூட வைத்து வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு, நெருங்கி வந்து அருள் பாலிக்கும் தேவர்களின் முதல்வன், விநாயகன். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் தத்துவமயமானவன்.
எதற்கும் ஆரம்பகர்த்தாவாக ‘பிள்ளையார் சுழி’ போட்டு பூஜிக்கப்படும் கணபதியை பக்தர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விநாயக சதுர்த்தியின் சிறப்பம்சங்கள்…
வழிபடும் முறை
மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களாலும், முத்து, பவளம் போன்ற ரத்தினங்களாலும், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் முதலான பொருட்களில் விநாயகரை வடிவமைத்து வழிபடலாம்.
நைவேத்தியம்
நைவேத்தியப் பிரியரான விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி, லட்டு, கொண்டைக்கடலை சுண்டல் போன்ற பண்டங்களை படைக்க வேண்டும்.
நிவேதனமும் தத்துவமும்
மோதகம் வெளியே வெள்ளையாகவும் உள்ளே இருக்கும் பூரணம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். வெள்ளையான, தூய்மையான மனம் இருந்தால் கண்ணுக்கு தெரியாத இறைவனை அடையலாம் என்கிற உண்மை இதனூடாக புலப்படுகிறது. கரும்பு கடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உள்ளிருக்கும் சாறு இனிப்பானது. அதுபோலவே வாழ்க்கையும் கஷ்டங்கள் வந்தாலும், அதை போராடி கடந்தால் தான் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அவல், பொரி போன்றவை ஊதினாலே பறந்துவிடும். நாம் சந்திக்கும் துயரங்களையும் ஊதித் தள்ளிவிட்டுப் போக வேண்டும் என்பதே இவற்றின் தத்துவம்.
கணபதிக்கு பிடித்த 21
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. மொத்தம் 21. இதை எடுத்துக்காட்டவே 21 என்கிற எண்ணிக்கை விநாயக வழிபாட்டில் சிறப்பு பெறுகிறது. இதை உணர்த்தும் விதமாக 21 மலர்கள், 21 இலைகள், 21 பழங்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நம் பாவங்கள் நீங்கும். பேராற்றல் கிடைக்கும். வாழ்வில் சந்தோஷம் கூடி வரும்.
தும்பிக்கையானின் ஆயுதங்கள்
விநாயகர் பல ஆயுதங்களை ஏந்தியவராக காட்சியளித்துள்ளார். பாசம், அங்குசம், வேதாளம், தந்தம், வில், அம்பு, சக்கரம், கத்தி, கேடயம், கதாயுதம், தண்டம், சூலம், நாக பாசம், சம்பட்டி, மழு, குந்தாலி, கொடி, கமண்டலம், பரசுபுஷ்பாணம், நட்டுவாங்கம், தீ, அகல், சாமரம், கரும்பு வில், சங்கம், கோடாரி, அட்சர மாலை மற்றும் வீணை.
வெள்ளை விநாயகர்
மா மற்றும் வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வழிபடுவதும் வழக்கம். கடல் நுரையால் தேவர்கள் உருவாக்கிய திருவலஞ்சுழி விநாயகரே இந்த வழிபாட்டுக்கு முன்னோடி.
விநாயக விசர்ஜனம்
மண்ணால் சிலை செய்து, அதை நீரில் கரைக்கும் நிகழ்வே விசர்ஜனம் எனப்படுகிறது. உலக சிருஷ்டியில் முதல் முதலாக தோன்றிய வஸ்து மண்ணும் கடலும் தானாம். அதனால் தான் இந்த ஆதிநாயகனை களிமண்ணால் செய்து, கடலில் கரைக்கிறார்கள்.