முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
சசிகலா, டி. டி. வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பிடியில் இருந்த அதிமுகவை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, அதிமுகவின் கட்சியை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வழி நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதுவரை கட்சியில் இருந்தும், அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அதிமுகவில் சென்னை, தேனி உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர் பதவி மற்றும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் காலியாக உள்ளது.
இந்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், இன்று மாலை 4. 30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில், சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜன், வெற்றிவேல், தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காலியாக உள்ள 6 மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவை வழி நடத்தி செல்ல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், 2 துணை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 உதவி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், காலியாக உள்ள அதிமுக நிர்வாகிகள் பதவிகளில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அதிகளவில் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு அதிக பதவி வழங்குவதன் மூலம், அதிமுக கட்சியில் தற்போது உள்ள உள்கட்சி பூசலை தவிர்க்க முடியும் என்று கருதப்படுகிறது.
அதேநேரம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவை தயார்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தேர்தலை முன்னிட்டு, தற்போது அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் அதிகளவில் விண்ணப்பங்கள் வாங்கிச் சென்று, உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று இன்று நடைபெறும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்படும்.