அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளன.
இதன்படி 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன. அதற்கமைய இதுவரையில் 41 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள சைனோபார்ம் தடுப்பூசிகள் 1 911 208 பேருக்கு முதற்கட்டமாகவும் , 836 814 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 925 242 பேருக்கு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் 384 047 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்புட்னிக் தடுப்பூசிகள் 114 795 பேருக்கு முதற்கட்டமாகவும் 14 427 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள சிறுநீரக மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனில் அவர்கள் தங்களது விபரத்தினை கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.
இவ்வாறான நோயாளர்கள் தமது பெயர் , தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போது வழங்கப்பட்ட அட்டை மற்றும் ஏனைய நோய்களுக்கான கிளினிக் அட்டை ஆகியவற்றின் புகைப்படப்பிரதிகள் என்வற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உரிய அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொள்வார் என்றும் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்