ஆடி பவுர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் பற்பல சிறப்புகளை கொண்ட ஒரு அற்புத மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில் தான் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் பூஜைகள், போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன. தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது. அத்தகைய ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக அற்புதமான தினம் தான் ஆடிப்பவுர்ணமி தினம். மிக சிறப்பான தினமான ஆடி பவுர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.
ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.
பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அருகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும். மேலும் ஆடி பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கின்றது.
மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும்.
வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த ஆடி பவுர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்த தொகையை தட்சணையாக தானம் தருவது உங்களின் அத்தனை விதமான தோஷங்களை போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.