ஆடி மாசம் காற்று அம்மிக்கல்லையே அசைக்கும் என்பார்கள் ஆனால் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். தென்மேற்கு பருவமழை காலத்தில் அக்னி வெயிலைப் போல சுட்டெரிக்கிறது வெயில். பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது.
அனல் காற்று வீசுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இந்த வெப்பத்திற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடலிலிருந்து குளிர்ந்த மேல் காற்று தரைப்பகுதிக்கு வராததே வெப்ப நிலை அதிகரிக்கக் காரணம். இன்னும் 2-3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28ஆம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கடல் காற்று தாமதமாக வீசி வருகிறது. மேலும் உள் தமிழகத்தில் வானத்தில் குறைவான மேகமூட்டமே காணப்படுகிறது என்று தெரிவித்தார். ஆடி மாதத்தில் வீசும் அனல் காற்று பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.