ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஸய்யத் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் ஏ குழுவுக்கான 2ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்த்தாடிய இலங்கை மிக இலகுவாக 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இனோஷி ப்ரியதர்ஷனி, கவிஷா டில்ஹாரி ஆகியோரின் துல்லியமாக பந்து வீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றிக்கு அடிகோலினர்.
தகுதிகாண் சுற்றில் இலங்கை ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும். இலங்கை தனது முதலாவது போட்டியில் தாய்லாந்தை வெற்றி கொண்டிருந்தது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து மகளிர் அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் 7ஆம் இலக்க வீராங்கனை லோனா ஜெக் (24), அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் (22), அய்சா லிஸ்டர் (13) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 3.1 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் இனோஷி ப்ரியதர்ஷனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
95 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவி சமரி அத்தபத்து 35 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்டநாயகி: கவிஷா டில்ஹாரி.