விண்வெளியை தொட்டுவிடுவேன் என்று பாடல்களிலும் கவிதைகளிலும் கேட்டிருப்போம் . ஆனால் மனிதனின் மாபெரும் முயற்சியால் விண்வெளியை மனிதன் தொட்டாலும் அது விண் வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.
சாதாரண மனிதர்களுக்கு அது சாத்தியமற்றதாகவே இருந்தது. ஆனால் அதனை சாத்தியப்படுத்தியுயள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் சொந்த பணத்தில் உருவாக்கிய விண்கலம் மூலம்.
உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வர்ஜின் கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில், பல்வேறு துறைகளிலும் தடம் பதித்திருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த வர்ஜின் என்கிற பல்தேசிய நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட ஐந்து பேருடன் விண்வெளிக்குப் பறந்தார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பன்ட்லாவும் உள்ளடக்கம்.
மெக்சிகோ பாலைவனத்திலிருந்து 88 கி.மீ உயரம்வரை சென்று வளைந்து இருக்கும் பூமிப் பந்தை ரசித்திருக்கின்றனர். புவிஈர்ப்பு விசை இல்லாமல் சுமார் நான்கு நிமிடங்கள் விண்வெளியில் மிதந்து பின்னர் மீண்டும் தரை இறங்கியிருக்கிறார்கள் இவர்கள்.
விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை பிரான்சன் தனது 71 ஆவது வயதில் நனவாக்கிக்கொண்டுள்ளார்.
யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை சிறிது குறைவாக உள்ள இடத்தில் விண்கலம் சிறிது நேரம் மிதந்தபடி இருந்தது.
அப்போது வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்து உற்சாகமாக இருந்தனர். பின்னர் என்ஜின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி விமானம் போன்று தரையிறங்கியது. பூமியிலிருந்து சுமார் 85 கிலோமீற்றர் உயரத்தில் இந்த விண்கலம் இயங்கி சாதனை படைத்தது.
பூமிக்குத் திரும்பிய பின்னர் தனது குழுவினரை வாழ்த்திய பிரான்சன், “17 ஆண்டு கால கடின உழைப்பிற்குக் கிடைத்த பலனாக இது கிடைத்துள்ளது” எனப் பெருமிதம் அடைந்தார்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். அப்போது பிரான்சன் கூறும்போது, “இது எனது வாழ்நாளின் சிறந்த அனுபவம். மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்” என்றார். இனி பணம் இருப்பவர்கள் விண்வெளிக்கு போக முடியும்… கொரோனா பெருந்தொற்றால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நிலையில், விண்வெளி சுற்றுலா வரபோகின்றது.
ஆம், விண்வெளிச் சுற்றுலா, அதாவது Space Tourism என்ற திட்டத்தை முன்வைத்து அமேசான் நிறுவனரான ஜெப் பெஸோஸின் (Jeff Bezos) ப்ளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனமும், ரிச்சர்ட் பிரான்சனின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் சில காலமாகவே கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.
இந்த மாதம் 20-ஆம் திகதி ஜெப் பெஸோஸின் ப்ளூ ஒரிஜின் நிறுவனம் பயணியர்களுடன் கூடிய முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. அதற்கு 9 நாட்களுக்கு முன்பே, விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.
சொந்த விண்கலத்தில் விண்வெளி பயணத்தை நிறைவு செய்த முதல் நபராகவும், விண்வெளிக்குச் செல்லும் 70 வயதைக் கடந்த இரண்டாவது நபர் என்ற பெருமையும் ரிச்சர்ட் பிரான்சனுக்கு கிடைத்துள்ளது.
தனது மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள் உட்பட 500 பேர் பார்த்து கொண்டிருக்க பிரான்சனின் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டது. பணக்காரர்களுக்கு இடையிலான தனியார் ஸ்பேஸ் டூரிசம் போட்டியில் வென்றுள்ள பிரான்சனை ப்ளூ ஆர்ஜின் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SPACEX) நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் வாழ்த்தினர்.
வர்ஜின் கேலக்டிக் என்ற அவரது நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற விமானம் தனது ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.
புவியின் காட்சி மறைகிற, வானம் இருண்டு கிடக்கிற, ஈர்ப்பு விசை மிகவும் குறைந்துபோய் தானாய் மிதக்கிற உயரத்துக்கு சென்று திரும்பியிருக்கிறார் பிரான்சன். விண்வெளிக்குச் செல்லும் தனது விருப்பத்தை 2004இல் தெரிவித்தார் பிரான்சன். பல தடைகளைக் கடந்து இப்போது நனவாகியிருக்கிறது அந்தக் கனவு. 2 விமானிகள், மூன்று ஊழியர்கள் பிரான்சனோடு பறந்தனர்.
“குழந்தைப் பருவத்தில் இருந்தே விண்வெளிக்கு செல்ல விரும்பினேன். அடுத்த நூறாண்டில் பல்லாயிரம் பேர் விண்வெளிக்கு செல்ல உதவி செய்யவேண்டும் என்றும் நினைத்தேன்,” என்று தெரிவிக்கிறார் ரிச்சர்ட். ‘யுனிட்டி’ என்ற அவரது விண்களத்தை மிகப்பெரிய இரண்டு விமானங்கள் சுமந்துகொண்டு சுமார் 15 கி.மீ. உயரத்தை, அதாவது 50 ஆயிரம் அடி உயரத்தை, அடையும் என்றும், அங்கே விமானங்கள் கழற்றிக்கொள்ள, விண்களத்தின் மோட்டார் கிளப்பப்பட்டு அங்கிருந்து விண்வெளி நோக்கிப் பயணம் தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டது.
60 விநாடிகளுக்கு அந்த மோட்டார் இயக்கப்படும். அப்போது கீழே பூமி அழகான காட்சியை வழங்கும். அதிகபட்சமாக 90 கி.மீ. உயரத்தை எட்டும் வகையில் இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டது. அதாவது 2 இலட்சத்து 95 ஆயிரம் அடி உயரம். உச்சத்தை அடையும் நிலையில் எடை அற்றுப் போய் விண்களத்திலேயே ரிச்சர்ட் பறக்கத் தொடங்குவார் என்பது திட்டம்.
அதிகபட்ச உயரத்தை அடைந்தபிறகு அங்கிருந்து அவர் தனது இருக்கைக்குத் திரும்பி தம்மை பூட்டிக் கொண்டு, கிளைடர் முறையில் பூமியை நோக்கித் திரும்பவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ரிச்சர்டின் வர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயண நிறுவனத்தைச் சேர்ந்த, பெத் மோசஸ் என்ற பெண் விண்வெளி வீரர், பிரான்சனின் பயணம் முழுவதையும் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருப்பார் என்று திட்டமிடப்பட்டது.
இதன் படி இந்த பயணம் வெற்றிப்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பணம் கொடுத்து பறக்க விரும்புகிறவர்களை இட்டுச் செல்வதற்கு முன்பு இந்த பயணத்தை தாம் அனுபவித்துப் பார்க்க விரும்பியதாக பிரான்சன் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து இந்தப் பயணம்ஆரம்பமானது. யுனிட்டி ஓர் அரை சுற்றுவட்டப் பயண வாகனம். அதாவது, புவியை சுற்றி வருவதற்குத் தேவையான திசைவேகத்தையோ, உயரத்தையோ இந்த வாகனத்தால் அடையமுடியாது.
கடல் மட்டத்தில் இருந்து 80 கி.மீ. உயரத்தை விண்வெளியின் விளிம்பு என்று வரையறுத்திருக்கிறது அமெரிக்கா. பிரான்சனின் வாகனம் இந்த உயரத்தைக் கடந்து சென்று திரும்புவதாகத் திட்டம். எனவே, இந்த தனியார் விண்வெளி பயணத்தை விண்வெளியின் விளிம்புக்குப் பயணம் என்று பலரும் வருணிக்கிறார்கள்.
மேலும் அவருடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி பெண்ணான ஸ்ரீஷா பண்ட்லா . கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸிற்கு அடுத்தாக விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் ஆகிறார்.
இதுகுறித்து சிரிஷா பன்ட்லா கூறும்போது, “விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. வாழ்க்கையை மாற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் இப்போதும் விண்வெளியில் இருப்பதாகவே உணர்கிறேன்.
நான் சிறுவயது முதலே விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்போது உண்மையாகி உள்ளது” என்றார். சிரிஷா பன்ட்லா ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தார். பின்னர் அமெரிக்காவின் ஹூஸ்டனில் பெற்றோருடன் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக ரீதியிலான விண்கலங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ரிச்சர்ட் பிரான்சன் 17 வருடங்களுக்கு முன்பு இந்த `வர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தைத் தொடங்கினார். விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் தொழில்ரீதியிலான பயணத்தை மேற்கொள்வதுதான் காலங்காலமாக மரபாக உள்ளது.
ஆனால் இந்த மரபுகளை உடைத்து சாமானியர்களும் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றுவரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ரிச்சர்ட் இதற்கு முன்னோட்டமாகவே இந்த விண்வெளிப்பயணத்தை தனது குழுவுடன் மேற்கொண்டிருக்கிறார். இனி விண் வெளி பயணம் பணம் இருக்கும் அனைவருக்கும் சாத்தியமாகும்.