இனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாயவின் இனவழிப்புக் கொள்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஐ.நா மேற்கொண்டு வருவதாகவும் அவதானிப்பு மையம் கவலை வெளியிட்டுள்ளது. முழு அறிக்கை வருமாறு:
ஸ்ரீலங்காவில் தமிழின அழிப்பு
“இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் எழுபது வருடங்களுக்கு மேலாக அரச எந்திரம் மற்றும் பொதுசன சிங்கள மக்கள் கொண்டு ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா அரச தரப்பினரால் இனவழிப்பு யுத்தம் வாயிலாக சுமார் ஐந்து லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால வரலாறு என்பது இனவழிப்பு காலமாகவே பதிவாகியுள்ளது. 56இனப்படுகொலை, 83 இனப்படுகொலை முதல் கட்டம் கட்டமாக இனவழிப்பு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் உச்சமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாயிலாக ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது. இவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யுத்தகளத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவாயிரம் பேர் இலங்கை அரச படைகளில் கையளிக்கப்பட்டவர்கள். போரில் கொல்லப்பட்டமை போன்றே காணாமல் ஆக்குதலும் இனவழிப்பாக மேற்கொள்ளப்பட்டது.
ஐ.நாவில் இனவழிப்பு வாக்குமூலம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்ற ஸ்ரீலங்கா அரச அதிபரும் ஈழ இனப்படுகொலை குற்றவாளியுமான கோத்தபாய ராஜபக்ச சென்றிருந்தார். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவில் மரணச்சான்றிழ் வழங்கவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஆன்டனியோ குட்டரெஸிற்கு கோத்தபாய வழங்கியுள்ளது முக்கிய வாக்குமூலமாகும்.
இதன் வாயிலாக இனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையாக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுகிறது என்ற கவலைக்குரிய அம்சம் நிகழ்வு இடம்பெறுகின்ற அதே சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதன் வாயிலாக அவர்களை இனப்படுகொலை செய்துள்ளமையை ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அவரது வாக்குமூலமாகவே கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
ஜெனீவா அமர்வில் ஸ்ரீலங்காவுக்கு ஊக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் செப்டர்மர் 13 தொடங்கிய நிலையில் அதன் அமர்வில் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சல் பச்செலெட் அம்மையார் இலங்கை குறித்து ஆற்றியுள்ள வாய்மொழிமூல அறிக்கை என்பது ஸ்ரீலங்காவின் இனவழிப்புக் கொள்கைக்கு உந்துதலை வழங்கியுள்ளது. இதனால் தமிழ் இனவழிப்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரீலங்காவின் இனவழிப்பு சார் கட்டமைப்புக்களை குறித்து கேள்வி எழுப்பாமல் அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டியுள்ள அம்மையாரின் செயற்பாடு இனவழிப்பு செய்தவர்களைளே நீதிபாக்கி எஞ்சிய மக்களை இனவழிப்பு செய்யலாம் என்ற ஆணையை வழங்கியுள்ளது. ஒற்றையாட்சி, உள்ளகப் பொறிமுறை ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட அம்மையாரின் வாய்மொழி அறிக்கை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு நீதிக்காக கண்ணீருடன் நிற்கின்ற இனத்தின் நியாயத்தை முற்றுமுழுதாக புறந்தள்ளியுள்ளது.
ஐநா அமர்வுகளின் பிரதிபலிப்புக்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரும் ஐ.நா பொதுச்சபையின் கூட்டமும் நடைபெற்ற சம நேரத்தில் இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்ற ஆளும் கட்சி அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழர் கைதியின்மீது துப்பாக்கியை வைத்து பாதணியை நக்குமாறு வற்றுபுத்தியிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் இரு அமர்வுகளின் பிரதிபலிப்பாக கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நாவே வெறுக்கத்தக்க இந்த ஒடுக்குமுறைகளை பெறுப்பேற்க வேண்டும்.
அத்துடன் தென்னிலங்கை மக்கள் பிரதிநிதி ஒருவர் மிகத் துணிச்சலாக பேரினவாத ஒடுக்குமுறைத் தன்மையுடன் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை எத்தகைய அளவில் புரையோடிப் போயுள்ளது என்பதை உணர முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் இனவழிப்புக்கான ஊக்கப்படுத்தல்கள் அம்பாறையில் தமிழச்சியின் வயிற்றை கிழித்து குழந்தையை கொன்ற பேரினவாத அழிப்பின் தொடர்ச்சியை வலுப்படுத்தியுள்ளது.
நினைவேந்தலுக்கு மறுப்பு
நிலைமாறுகால நீதியில் நினைவேந்தல் செய்யும் உரிமை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டு என்று ஐ.நா வலியுறுத்திய நிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கு ஸ்ரீலங்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது இனவழிப்புப் போரினால் காயப்பட்ட மக்களின் ஆற்றுப்படுத்தலுக்கு எதிரான நினைவழிப்புப் போராகும். அத்துடன் நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் மக்கள் பிரதிநிதி செ. கஜேந்திரன் (பா.உ) அவர்களின் நெற்றிமீது துப்பாக்கி வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை கடும் கண்டனத்திற்குரியதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெறும் நிலையில் ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடரில் அதிபர் கோத்தபாய தமிழர்களுக்கு மரணச்சான்றிதழ் அளிக்கப் போவதாக கூறும் தருணத்தில், தமிழர் ஒருவர்மீது சிங்கள அமைச்சர் துப்பாக்கியை நீட்டுவதும் சிங்கள கவல்துறை தமிழ் மக்கள் பிரதிநிதி துப்பாக்கியை நீட்டுவதும் ஸ்ரீலங்காவின் கோர முகத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. இதற்கு அரிதாரம் பூசி இனவழிப்பை ஊக்குவிப்பதை ஐ.நா உடன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்…” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]