போரும் வன்முறையும் எப்போதும் பெண்களையே பாதிக்கின்றது. மிகப் பெரும் ஒடுக்குமுறை என்பது பெண்களை சூழவே நிகழ்கிறது. பெண்தான் எல்லாவற்றுக்குமான விலையை கொடுக்கிறாள். பெண்களை வேட்டையானடினால் ஒரு இனம் அழித்துவிடும் என ஆக்கிரமிப்பாளர்கள் கருதுகின்றனர். உலகில் பெண்கள் எண்ணற்ற துயரங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கணவன், அல்லது துணையை இழக்கும் கொடூரமான வாழ்க்கை காலத்தை சந்தித்தல் ஆகும்.
உலகில் கணவனை இழந்த கைம்பெண்களின் பிரச்சினைகளை குறித்து கவனத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஜூன் 23 உலக விதவைகள் தினமாக 2010இல் பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் போர், பஞ்சம், வன்முறை, அசாதாரண நிலமைகள் காரணமாக கோடிக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக உலக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோடிக்கணக்கான உலக விதவைகளில் சுமார் 90ஆயிரம் ஈழ விதவைகளும் உள்ளடங்குகின்றனர் என்பது இன்னொரு அதிர்ச்சியான புள்ளிவிபரமாகும்.
உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர். 85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. விதவை என்ற அடையாளம் பெண்களை சமூகத்தில் பின் தள்ளுவதுடன் அவர்களை இருண்ட தனி வாழ்வுக்குள் வீழ்த்துகிறது. கணவனை இழந்த பெண் விதவை என்ற அடையாளத்துடன் தன் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறாள்.
இலங்கையில் நடைபெற்ற போர், மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகள் காரணமாக சுமார் 90ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. போர் விதவைளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் மகளீர் விவகார அமைச்சின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவு ஆண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அங்குதான் அதிகளவில் விதவைகள் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியல் நிலமை என்பது மிகவும் துயரமாகவும் போராட்டம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. போரில் விதவைகளாகப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகிறது.
முல்லைத்தீவுில் அதிகளவான ஆண்கள் கொல்லப்பட்டு, அங்கே விதவைகள் அதிகரித்துள்ளனர் என்று ஐ.நா சொல்கின்ற விபரம்தான், அங்கே நடந்த மிகப் பெரிய இனவழிப்பையும் எடுத்துரைக்கின்றது. ஒரு உண்மையை ஏற்கும் ஐ.நா இன்னொரு உண்மையை இன்னும் ஏற்காமல் இருப்பதனால்தான் ஈழத்தில் விதவைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், நீதிமறுக்கப்பட்ட இருண்ட பக்கத்தில் வாழ்கின்றனர்.
90 குடும்பங்கள் விதவைகளாக்கப்பட்ட நிலையில் சில குடும்பங்களில் முழு உறுப்பினர்களும் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இங்கு மூன்று தலைமுறைப் பெண்களும் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பம் முழுமையாக ஆண் உறுப்பினர்களை இழந்துள்ளது. இத்தகைய அதிர்ச்சிகரமான இழப்புக்களும் ஈழத்தில் நடந்துள்ளன. போர் வலயத்தில் கொல்லப்பட்டதுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டும் பலர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கில் உள்ள விதவைகளில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத் தொழிலற்ற நிலையில் வாழ்கிறார்கள். தமது பிள்ளைகளை கல்வி கற்கச் செய்வதற்கும் அன்றாடம் உண்ணுவதற்குமே அவர்கள் பெரும்பாடு படுகின்றனர். விதவைகளாகவும் அங்கவீனர்களாகவும் பலர் வாழ்கின்றனர். இவர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை. சுய தொழிலை உரிய வகையில் மேற்கொண்டு அவர்களை வழிப்படுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கில் அதிகளவான பெண்கள் விதவைகளாக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள் என்றும் இலங்கையின் மகளீர் விவகார அமைச்சர் சாந்தி பண்டாரவிடம் அல் யசீரா நிருபர் கேட்டபோது, அந்தப் பிரச்சினையின் கொடுமையை புரியாதவராய் பேசினார் சாந்தினி பண்டார. ஒரு மகளீர் விவகார அமைச்சர் வடகிழக்குப் பெண்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுகிறார் என்பதையும் வடகிழக்குப் பெண்கள் எதனால் விதவைகளாக்கப்பட்டனர் என்பதையும் இந்த அணுகுமுறை வெளிக்காட்டுகிறது.
இராணுவத்தில் கணவனை இழந்த சிங்கள விதவைப் பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளைவிட தமிழ் விதவைப் பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மிகவும் குறைவு என்று அல் ஜசீரா தன்னுடைய போரின் விதவைகள் என்ற ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியது. தமிழ் இனத்தை இலங்கை அரசு சமமாக நடத்தாமையின் அவர்களுக்குரிய உரிமைகளை சமமாக பகிராமையின் வெளிப்பாடே இது. தன்னுடைய நடவடிக்கை காரணமாக விதவைகளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் நிலையில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாதிருப்பது இன வேறுபாட்டை காட்டும் அதன் செயற்பாடே.
தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சிறுபான்மையின மக்களாக வாழும் நிலையில் இலங்கைத் தீவில் உள்ள விதவைகளில் பெரும்பான்மையாக வடகிழக்கு தமிழ் பெண்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையினத்தில் பெரும்பான்மையானவர் விதவைகளாக்கப்பட்டிருப்பது ஏன்? பெண்களை விதவைகளாக்குவதன் ஊடாக ஒரு இனத்தின் விருத்தியை பாதிப்பதற்காக இந்த உத்தி மேற்கொள்ளப்பட்டதா? உலகில் விதவைகளின் பிரச்சினையை தீர்க்க அந்த சமூகத்தை பால் சமத்துவம் உள்ள சமூகமாக மாற்றுவதே வழி என்று பெண்ணியவாதிகள் குறிப்பிடுகிறார்கள். பெண்கள் விதவைகளாக இருப்பது ஒரு சமூகத்தை முடங்கச் செய்யும் செயல் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஈழத்தில் விதவைகளாக்கப்பட்டவர்களில் வெகு சிலரே மறுமணம் செய்துள்ளனர்.
ஒரு இன அழிப்பை சந்தித்த ஈழம் தமது விதவைப் பெண்களை மறுமணம் செய்ய வைப்பதில்தான் இன விருத்தி தங்கியிருக்கிறது. வாழ்வியல், பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவையும் தீரக்கும் வாய்ப்புக்கள் ஏற்படும். ஈழ விதவைகளின் பிரச்சினை தீரக்கப்படுவதில் சமூகத்தின் புதிய அணுகுமுறைகளும் சமூக நோக்கமும் அவசியமானது. எல்லாவற்றுக்கும் அடிப்படையானது இனவழிப்பு நீதிதான். இனவழிப்பின் நீதியில் இருந்துதான் ஈழத் தமிழ் மக்களுக்கான விடிவும், ஈழப் பெண்களுக்கான விடிவும், ஈழக் கைம்பெண்களுக்கான விடிவும் தங்கியிருக்கிறது.
* * *