தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சம்பந்தனின் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தி தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றது. நாம் ஐந்து தசாப்தங்கள் கடந்து அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பெருந்தலைவரின் இறுதி நிகழ்வில் இணைந்திருக்கின்றோம்.
சம்பந்தன் சொற்களை வெற்றுப்பொருளாக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார். அவர் அர்த்தமான, முக்கியமான பொருள் பொதிந்த வகையில் தான் கருத்துக்களை வெளிப்படுத்துவார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் வகித்த காலத்தில் சவால்களைக் கொண்டு வெற்றிக்கொண்டார்.
குறிப்பாக அதிகாரவர்க்கத்தினர் தம்வசம் அதிகாரங்களை குவிப்பதற்கு முயற்சித்த காலத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து சவால்களை சமாளித்து வெற்றிகொண்டார்.
அதேநேரம், நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததோடு 2015இல் அதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஆனால் அந்த முயற்சியில் அவரால் வெற்றிபெற முடிந்திருக்கவில்லை.
சம்பந்தன் போரின் கோரங்களை உணர்ந்துகொண்டு அதன் பின்னரான காலத்தில் உள்ள நிலைமைகளையும் அவதானித்து நாட்டின் ஐக்கியத்துக்காக செயற்பட்ட ஒரு தலைவராக அவர் இருந்தார் என்றார்.