இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்!
படையினருக்கு நற்சான்று வழங்குவதற்கும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல்களை மூடிமறைப்பதற்காகவே காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள் என்பது 1983ம் ஆண்டு ஆரம்பித்து 1994ம் ஆண்டு தீவிரமாகியது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தல் செம்மணி படுகொலை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகமாக இடம்பெற்றது.இலங்கை பூராகவும் இது நடைபெற்றது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலேயே உள்ளது. இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் போயுள்ளார்கள்.
இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையான அறிவித்தலை வெளியிடுமா? குறிப்பாக செம்மணியில் காணாமல் போனவர்கள் அங்கு புதைக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்துமா?
தற்போது காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது எனக் கூறுவது ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றுகின்ற கண்துடைப்பு நாடகமாக இதனைப் பார்க்கமுடியும்.
இதிலே காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு சொல்லவேண்டும்.காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதை விடுத்து, குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், மனைவி, சகோதரர்கள், தாய், தந்தையர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கு பதில் கூறவேண்டும்.
ஆனால் இதற்கு இதுவரை பதில் இல்லை.
காணாமல் போனவர்கள் தொடர்பில் இரு வகையுள்ளது. ஒன்று இறுதிப் போரில் சரணமடைந்தவர்கள், மற்றையது கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள்.
ஆகவே இவர்கள் மொத்தமாக ஏறக்குறைய 20 ஆயிரம் பேர்வரை இருக்கும் என்று எங்களுடைய மதிப்பீடுகளிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மதிப்பீடுகளிலும் கூறப்படுகின்றது.
இது ஒருவர், இருவர் காணாமல் போன சம்பவம் அல்ல. 20 ஆயிரம் பேர் காணாமல் போனது, சிறிய விடயம் அல்ல, இரண்டு கோடி மக்களைக் கொண்ட நாட்டில் இது சாதாரண விடயம் அல்ல.
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போர்க்குற்ற விசாரணைகளில் இந்த விடயத்தை எடுத்துவிடும் என்பதற்காகக் காணாமல் போன உறவுகளை மனதளவில் நோகச்செய்து இந்த விடயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவே இதனைப் பார்க்கின்றோம்.
இதுமட்டுமல்ல; சரணடைந்து காணாமல்போனோர் தொடர்பில் எவ்வித முடிவும் இன்றி எமது மக்கள் அங்கலாய்த்துக்கொண்டுள்ள நிலையில் அவர்களை காணாமல் போய்விட்டார்கள் அல்லது அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொங்கல் தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மக்களை மனதளவில் நோகடித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள விசாரணைகளில் ஈடுபடாது ஒதுங்கியிருக்கச்செய்யும் சதிமுயற்சியே இதுவாகும்.இவை பாரதூரமான பிரச்சினை;
இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பாக சர்வதேசம் விசாரணை செய்யவேண்டுமென்ற எங்களுடைய கோரிக்கை தற்போது வெளிநாட்டுப் பங்களிப்பு இல்லாத உள்நாட்டு விசாரணை என்று சொல்லியும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.
15 மாதத்தில் நல்லாட்சி, அரச படையினருக்கு நற்சான்றிதழ் வழங்குவது போன்றே காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்க முயற்சிப்பதும் அமைந்து விடுகிறது.
இனப்படுகொலை, யுத்தக் குற்றங்களையும் மூடி மறைக்கும் திட்ட மிட்ட முயற்சியே இதுவாகும் என்றார்.