இது இலங்கையர்களின் நாடு. இங்கு சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். நாம் பெரும்பான்மை என்பதற்காக எமது கருத்தை அடுத்தவர்களுக்கு திணிக்க முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு கூறியுள்ளார்.
எனக்கும் சில வாய்ப்பேச்சு வீரர்களைப் போன்று இது சிங்கள பௌத்த நாடு எனவும், இங்கு உங்களுக்கு வேண்டியவாறு வாழ முடியாது எனவும் கூற முடியும். அவ்வாறல்ல, இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களின் நாடு மட்டுமல்ல. இது இலங்கையர்களின் நாடு.
இந்த நாட்டில் இன்று பிறப்புரிமை பெறும் ஒருவரும் 1000 வருடங்கள் வாழ்ந்தவர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்கின்றார். இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகள் என எவரும் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.