”புதுச்சேரி காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்கான எதையும் செய்யவில்லை” என்று முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது “துணைநிலை ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே அவரைச் சந்தித்தேன். மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் சிறப்பானது. நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பட்ஜெட். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். விவசாயிகள் கடனுக்கான நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறைக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களைத் தீட்டியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள், தாய்மார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில் மற்றும் ஜவுளித் துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் தொழில் துவங்குவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்படி அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியை உண்டாக்கக்கூடிய வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து நிலைகளிலும் இந்த பட்ஜெட் உதவும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெறும் 4 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. கூட அரசை எதிர்த்துப் போராடும் நிலையில் பிரதான எதிர்கட்சியான நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்?
“இந்த அரசு செயலற்ற ஓர் அரசாக இருக்கிறது எனப் பலமுறை நாங்கள் கூறியிருக்கிறோம். எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. யாரையாவது குறை சொல்லும் அரசாகத்தான் இருக்கிறதே தவிர மக்கள் நலனுக்கான வேறெதையும் செய்வதில்லை.”
10 ஆண்டுகளுக்கு முன் உங்கள் ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடன்தான் தற்போதைய அரசின் நிதி நெருக்கடிக்கான காரணம் என்று சொல்லப்படுகிறதே ?
”எந்த மாநிலத்தில் கடன் வாங்காமல் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா? தேவைக்கு ஏற்பக் கடன்களைப் பெற்றுத்தான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் எப்போதும் இருந்திருக்கிறோம்.”
வேறு துறைகளில் இருந்து நிதியை மடைமாற்றம் செய்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே ?
”அனைத்துத் துறைகளின் நிதியும் மக்கள்நலத் திட்டங்களுக்குத்தானே. நிதி மேலாண்மையைச் சரியாக செயல்படுத்தினால் அனைத்தும் சரியாக இருக்கும்”