‘இந்திய மருமகன்’ போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமர் வேட்பாளராகிறார்!
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தேர்தலுக்கு முன்பே அறிவித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ள சம்மதித்துள்ளார்.
இதையடுத்து டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து மற்றொரு தகுதியான நபர் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட உள்ளார். அந்த போட்டியில் முதலிடம் பெறுபவர் போரிஸ் ஜான்சன். லண்டன் மாநகராட்சியின் முன்னாள் மேயர் இவர்.
மொத்தம் இரு வேட்பாளர்களை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து தங்களுக்குள் ஆலோசித்து கட்சி தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் அறிவிக்க உள்ளது. ஜான்சனுக்கு போட்டியாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை.
ஜான்சனும், கேமரூனும் கல்லூரி கால தோழர்களாம். கேமரூன் பதவி விலக முடிவெடுத்துள்ளது குறித்து ஜான்சன் கூறுகையில், இது எனக்கு சோகமானதுதான். இருந்தாலும், கேமரூனின் தைரியத்தையும், சொன்ன சொல்லை காப்பாற்றும் கொள்கையையும் பாராட்டுகிறேன். இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதி கிடைப்பது அரிது, என்று தெரிவித்துள்ளார்.
1980களில் இருந்து பத்திரிகையாளராக விளங்கியவர் ஜான்சன். இப்போது பெரும் செல்வந்தராகியுள்ளபோதிலும், பத்திரிகை தொழிலில் தனக்குள்ள அனுபவத்தைவிட்டு விலக அவர் தயாராக இல்லை. இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான ‘தி கார்டியன்’ நாளிதழில் இப்போதும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தோடு, பிரிட்டன் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்கும், இருக்க கூடாது என்பதற்கும் இரு வேறு காரணங்களை தனது கட்டுரைகளில் சுட்டி காட்டியிருந்த ஜான்சன், வாக்கெடுப்புக்கு முன்பு தனது நிலைப்பாட்டை ஒரு பக்கமாக எடுத்தார். அதாவது, பிரிட்டன் பிரிய வேண்டும் என்று கட்டுரை எழுதினார்.
ஜான்சனின் மனைவி பெயர் டிப் சிங். இவர் இந்தியாவின் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர். கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யும், பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் முதல் இந்து எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான பிரீத்தி பட்டேலும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்களது அருகாமையாலோ என்னவோ, ஜான்சனுக்கு இந்தியா மீது எப்போதுமே மரியாதை உண்டு
.