மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றி தங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் டெர்பி நகரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 109, ஹர்மன்பிரீத் கவுர் 60, வேதா கிருஷ்ணமூர்த்தி 70 ரன்களைச் சேர்த்தனர். நியூஸிலாந்து அணியில் லே கஸ்பெரக் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி, 25.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து, இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால்தான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதை உணர்ந்து இந்திய வீராங்கனைகள் சிறப்பாக ஆடினர். டெர்பி மைதானத்தில் நாங்கள் ஏற்கெனவே 4 போட்டிகளில் ஆடியிருந்ததால் அந்த மைதானத்தின் ஆடுகளம் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதுவும் எங்கள் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இப்போதைய இந்திய அணி புதிய அணியாக எனக்குத் தெரிகிறது. எத்தகைய சவாலையும் சமாளிக்கும் ஆற்றல் இந்த அணிக்கு உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, எங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.
இவ்வாறு மிதாலி ராஜ் கூறினார்.
அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வரும் 20-ம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆடவுள்ளது.