பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த இந்தியாவின் பிரபல கபடி வீரர் ஒருவர் நாடு திரும்பிய நிலையில் கபடி சுற்றுப் போட்டி ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை 15 ஆம் திகதி தெரிவித்தனர்.
கைகோர்த்தல் என்ற பொருளைக் கொண்ட கபடி இற்றைக்கு ஆயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டாகும்.
இந்தியாவில் மிகவும் பிரபலம் பெற்ற கபடி விளையாட்டுப் போட்டி ஒன்றை இந்தியாவில் நடத்துவதற்காக சென்றிருந்தபோது சந்தீப் நங்கல் என்ற முன்னாள் வீரர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கிளாடியேட்டர் என அறியப்பட்ட சந்தீப் நங்கலின் முகத்திலும் நெஞ்சிலும் சூட்டுக்காயங்கள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச கபடி போட்டிகளில் பங்குபற்றிய 37 வயதான சந்தீப் நங்கல், ஐக்கிய இராச்சியத்திற்கு புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வந்தார்.
பஞ்சாபில் கபடி சுற்றுப் போட்டி ஒன்றை நடத்துவதற்காக அவர் பிரித்தானியாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.
‘கபடி சுற்றுப் போட்டியை சந்தீப் மேற்பார்வை செய்துகொண்டிருந்தபோது அவரது உடலை 20 முதல் 25 வரையான ரவைகள் துளைத்ததாகவும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவரை அண்மையில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தபோது உயிர்பிரிந்திருந்ததாகவும் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகளைக் கைதுசெய்வதற்காக தேடுதல் நடவடிக்கையுடன் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் 2014இல் கபடி விளையாட்டு தொழில்சார் விளையாட்டாக மாறியதுடன் எல்பிஎல்லுக்கு ஒப்பான ப்ரோ கபடி லீக் 2014இல் ஆரம்பிக்கப்பட்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]