ஒட்டாவா, கனடாவில், 28 வயது இந்திய இளைஞரை, மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் உள்ள கார் நிறுவனத்தில் யுவராஜ் கோயல், 28, என்ற இந்திய இளைஞர் பணியாற்றி வந்தார்.
இவர், பஞ்சாப் மாநிலம் லுாதியானாவை சேர்ந்தவர்.
கடந்த 7ம் தேதி காலை அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த அவர், இந்தியாவில் வசிக்கும் தன் தாயிடம் மொபைல் போனில் பேசி உள்ளார்.
அப்போது மர்ம நபர்கள், யுவராஜ் கோயல் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார், யுவராஜ் கோயலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மான்வீர் பாசுராம், 23, சாஹிப் பாஸ்ரா, 20, ஹர்கிராட் ஜூடி, 23, கெய்லான் பிரான்கோஸ், 20, ஆகிய நான்கு பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.
எதற்காக யுவராஜ் கோயல் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, யுவராஜ் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லாத நிலையில், அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.