இந்திய அணிக்கு ஏமாற்றம்: முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று கான்பூரில் தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
லோகேஷ் ராகுல் (8) ஏமாற்றினார். நிதானமாக ஆடி வந்த கோஹ்லி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த ரெய்னா அதிரடி காட்டி 23 பந்தில் 34 ஓட்டங்கள் குவித்தார். யுவராஜ் சிங் (12), மணீஷ் பாண்டே (3), ஹர்திக் பாண்டியா (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா நெருக்கடியில் சிக்கியது.
இதன் பின்னர் களமிறங்கிய டோனி கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் குவிக்க இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் சேர்த்தது.
டோனி 27 பந்தில் 3 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 148 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக இறங்கிய ஜாசன் ராய் (19), சாம் பில்லிங்ஸ் (22) நிலைக்கவில்லை.
ஆனால் இதன் பிறகு இணைந்த அணித்தலைவர் மோர்கன், ரூட் ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தது.
அதிரடி காட்டிய அணித்தலைவர் மோர்கன் 38 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்சர் என 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் நிதான ஆட்டத்தை தொடர்ந்த ரூட் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 18.1 ஓவரிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஜோ ரூட் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில், சாஹல் 2 விக்கெட்டும், பர்வீஸ் ரசூல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.