விஸ்பரூபமாக மாறிய இந்தி சர்ச்சையில் பிரபல நடிகை ரம்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் கன்னடப் படமான கே.ஜி.எப்.2 பான் இந்திய படமாக உருவாகி இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சுதீப், “கன்னடா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி விட்டன. எனவே இந்தி இனி ஒரு போதும் தேசிய மொழியாக இருக்க முடியாது” என்று கூறினார்.
சுதீப்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சமூக வலைத்தளத்தில் இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, இந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்தி தான் நமது தேசிய மொழியாக இருந்தது இருக்கிறது, இனிமேலும் இருக்கும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இதற்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். அதில் “இந்தியை மதித்து நேசித்து கற்றுக் கொண்டு இருந்ததால் அவர் இந்தியில் எழுதி இருந்தது எனக்கு புரிந்தது. ஒரு வேளை கன்னடத்தில் தான் பதிவிட்டு இருந்தால் அதை எப்படி புரிந்து கொள்வீர்கள்” என்று அஜய் தேவ்கனுக்கு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கருத்து மோதல் சமுக வலைத்தளத்தில் பெரும் பேசுப் பொருளாக மாறியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அஜய் தேவ்கனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஜய் தேவ்கனின் பதிவிற்கு குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமடைந்த நடிகை ரம்யா, அஜய் தேவ்கனுக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இல்லை – இந்தி நமது தேசிய மொழி அல்ல. அஜய் தேவ்கன் உங்கள் அறியாமை திகைப்பூட்டுகிறது. கே.ஜி.எஃப், புஷ்பா மற்றும் ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் இந்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கலைக்கு மொழி தடை இல்லை. உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பது போல் எங்கள் படங்களையும் ரசியுங்கள்” என்று குறிப்பிட்டு இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற ஹஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.